×

வருமானத்துக்கு அதிகமாக ₹65.87 லட்சம் சொத்து குவிப்பு: கோவை மாவட்ட மாஜி பதிவாளர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு

கோவை: கோவை மாவட்டத்தில் தணிக்கை பிரிவு மாவட்ட பதிவாளராக பணியாற்றி வந்தவர் செல்வகுமார்(46). இவர் விளாங்குறிச்சி ரோடு வராகமூர்த்தி அவென்யூ பகுதியில் வசித்து வருகிறார். இவர் கடந்த 2003ம் ஆண்டில் இருந்து 2006ம் ஆண்டு வரை கணபதி சார்பதிவாளராக பணியாற்றியுள்ளார். கடந்த 2009ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை இவர் தனது மாமியாரான சிவகங்கையை சேர்ந்த பாண்டியம்மாள் (67) என்பவரது பெயரிலும், மனைவியின் தங்கையான தனியார் பள்ளி ஆசிரியையாக பணியாற்றும் மதுரையை சேர்ந்த தென்றல் (40) என்பவர் பெயரிலும் சொத்துக்கள் அதிகளவு வாங்கி குவித்திருப்பதாக தெரிகிறது.செல்வகுமாரின் தந்தை துணை கலெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றார். செல்வகுமாருக்கு முகில் என்ற மனைவி, இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். 5 சகோதரிகள், ஒரு சகோதரர் உள்ளார். செல்வகுமார் தனது மனைவியின் தங்கை பெயரில் பல லட்ச ரூபாய் செலவில் விளாங்குறிச்சி ரோட்டில் வீடு கட்டியிருக்கிறார். கடந்த 2009ம் ஆண்டில் 11.46 லட்சம் ரூபாயில் இடம், வீடு, 2012ம் ஆண்டில் 89.82 லட்சம் ரூபாயில் வீடு, இடம், 2009 முதல் 2012ம் ஆண்டு வரை 78.36 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள், 65.87 லட்சம் ரூபாயில் சொத்துக்கள் செல்வகுமார் தரப்பினர் வாங்கியிருப்பதாக தெரிகிறது.இவர் தனது வருமானத்தை காட்டிலும் 242 சதவீதம் அதாவது 65.87 லட்ச ரூபாய் சொத்து குவித்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான சொத்து ஆவணம் மற்றும் பல்வேறு ஆதாரங்களை வைத்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி வழக்குப்பதிவு செய்துள்ளார். செல்வகுமார் பத்திர பதிவு விதிமுறை மீறல் தொடர்பாக துறை ரீதியான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர். இவர் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் கோவை மாவட்ட பத்திர பதிவு அலுவலகத்தில் தணிக்கை பிரிவு மாவட்ட பதிவாளராக பணியாற்றியுள்ளார். 3 ஆண்டு காலம் இவர் பணியாற்றியபோது பல்வேறு முறைகேடுகளை தணிக்கையில் தடுக்காமல் விட்டு விட்டதாக கூறப்படுகிறது.மேலும் அதிமுகவினர் பல்வேறு பகுதியில் விதிமுறை மீறி சொத்து வாங்கி குவிக்க உதவி செய்துள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. பல்வேறு புகார்களின் பேரில் செல்வக்குமார் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது இவருக்கு எந்த பணியும் ஒதுக்கப்படாத நிலையில் இவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் சொத்து ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தினர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்தது தொடர்பாக ஆதாரத்தின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.செல்வகுமாரின் வங்கி கணக்கு, பல்வேறு பகுதியில் லாக்கர் மற்றும் அவரது தொடர்பில் உள்ள நபர்கள் பெயரில் மேலும் சொத்துக்கள் வாங்கியிருக்கிறாரா? என போலீசார் விசாரிக்கின்றனர். அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் சிலருக்கு இவர் சொத்து வாங்க, பல்வேறு பினாமிகளின் பெயரில் சொத்து ஆவணம் பதிவு செய்ய உதவியிருக்கலாம் என கூறப்படுகிறது. இதன் பின்னணி குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்….

The post வருமானத்துக்கு அதிகமாக ₹65.87 லட்சம் சொத்து குவிப்பு: கோவை மாவட்ட மாஜி பதிவாளர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Registrar ,Maji District of Govai ,Govai ,Selvakumar ,Audit Division District Registrar ,Govai District ,Vlangkirichi Road Varakamurthi Avenue ,Maji Registrar of ,Goai ,District ,Dinakaran ,
× RELATED பொது விநியோகத் திட்டப் பொருட்களை...